SELANGOR

கிள்ளான் ஆற்றில் குப்பைகளின் அளவு மூன்று மடங்கு குறைந்தது- ஆற்றில் தூய்மை அதிகரிப்பு

கிள்ளான், மே 29- கிள்ளான் ஆற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 67 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 16,000 மெட்ரிக் டன்களாக இருந்த குப்பைகளின் அளவு கடந்தாண்டு 5,800 டன்களாக குறைந்ததாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கிள்ளான் ஆற்றில் நீடித்த நிலைத்தன்மையைக் காக்க லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனம் அமல்படுத்தியுள்ள  சிலாங்கூர் மெரிடைம் கேட்வே திட்டத்தின் ஒரு பகுதியாக இண்டசெப்டர் 002 இயந்திரத்தி வாயிலாக துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த துப்புரவுப் பணிகள் இண்டர்செப்டர் இயந்திரத்தை மட்டும் சார்ந்திராமல் அமலாக்க நடவடிக்கைகளையும் உட்படுத்தியுள்ளது என்று இஷாம் தெரிவித்தார்.

இது வரை இண்டர்செப்டர் இயந்திரத்தின்  வழி ஆற்றில் குப்பைகளின் அளவு  67 விழுக்காடு வரை குறைந்துள்ளது. ஐந்தாவது ஆண்டில் நுழைந்த போதிலும் இந்த இயந்திரம் இன்னும் சிறப்பான முறையில்  செயல்படுகிறது என்று அவர் சொன்னார்.

இண்டர்செப்டர் இயந்திரம் தவிர்த்து ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் ஆற்றில் குப்பைத் தடுப்புகளையும் அமைத்துள்ளோம். அதோடு மட்டுமின்றி ஆற்றில்  மாசுபாட்டைக் கண்டறிவதற்காக அடிக்கடி நீரில் சோதனை நடத்தப் படுவதோடு விழிப்புணர்வு இயக்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில்  உள்ள ஆறுகளின் தரத்தை மேம்படுத்தும் மாநில அரசின் முயற்சிகள் முழுமையாக வெற்றியடையாத போதிலும் இத்தகைய முன்னெடுப்புகள் ஒவ்வோராண்டும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றார் அவர்.

கடந்த 2016 முதல் 2023  வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 88,000 டன் குப்பைகளை லண்டாசான் லுமாயான் நிறுவனம் வெற்றிகரமாக அகற்றியது. இண்டர்செப்டர் 005 மற்றும் இண்டர்செப்டர் 002 ஆகியவற்றோடு ஆற்றில் அமைக்கப்பட்ட ஏழு குப்பைத் தடுப்புகள் வாயிலாகவும் இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.


Pengarang :