SELANGOR

சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வெளியேற முயன்ற 11 அந்நியப் பிரஜைகள் கைது

ஷா ஆலம், மே 30- கேரீத் தீவு, பந்தாய் தஞ்சோங் ரூ வழியாக நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சிறுவர்கள் உட்பட 11 அந்நிய நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரீத் தீவு பாதுகாப்பு சாவடியை சேர்ந்த பொது நடவடிக்கைப் பிரிவு (பி.ஜி.ஏ.) உறுப்பினர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் ஏழு முதல் 51 வயது வரையிலான அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக கோல லங்காட் மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. முகமது சுபியான் அமின் கூறினார்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்று கூடியிருந்த இந்தோனேசியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த இரு ஆடவர்கள், நான்கு பெண்கள் மற்றும் ஐந்து சிறார்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களிடம் செல்லத்தக்க பயணப் பத்திரம் எதுவும் இல்லாதது கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.

அந்த சட்டவிரோதக் குடியேறிகளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அங்கீகரிக்கப்படாத வழியில் அதாவது கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக பந்திங் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முறையான ஆவணங்களைக் கொண்டிராத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 1959/1963 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப் படலாம் என்றார்.


Pengarang :