SELANGOR

கையூட்டு பெற்றதாக நான்கு சுங்கத் துறை பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், மே 30- கையூட்டாக  39,800 வெள்ளியைப் பெற்றதாக அரச மலேசிய சுங்கத் துறையின் நான்கு அமலாக்க உதவியாளர்கள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அனிதா ஹருண் முன்னிலையில் தங்களுக்கு எதிராக கொண்டு வரப் பட்ட குற்றச்சாட்டுகளை அலியாஸ் மாட் யூசுப் (வயது 48), முகமது ரிஸால் ஓத்மான் (வயது 43), முகமது ஷாரில் முகமது சுக்காமி (வயது 39) மற்றும் முகமது ஹனாபி சே மாட் (வயது 39) ஆகிய நால்வரும் மறுத்து விசாரணைக் கோரினர்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே வெ. 200 முதல் வெ.2,300 வரை பெற்றது தொடர்பில் ரிஸால் ஒன்பது குற்றச்சாட்டுகளையும் கடந்த 2020 ஜூன் முதல் கடந்தாண்டு ஜனவரி வரை மாதம் வெ.150 முதல் வெ.3,600 வரை பெற்றது தொடர்பில் ஹனாபி 10 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.

ஷாரிலுக்கு எதிராக கடந்த 2018 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை மாதம் வெ.200 முதல் வெ.2,000 வரை பெற்றதாக 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வேளையில் கடந்த 2019 ஜூன் முதல் 2022 ஜூலை வரை மாதம் வெ.500 முதல் வெ.1,500 வரை பெற்றதாக அலியாஸ் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், காஜாங், பண்டார் பாரு சாலாக் மற்றும் பண்டார் பூச்சோங் ஜெயாவிலுள்ள வங்கிக் கிளைகளில் இக் குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கே.எல்.ஐ.ஏ. கார்கோ மையத்திலிருந்து  வெளியேறும் காலோஸ் எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான லோரிகளை சோதனையிடாமல் இருப்பதற்கு கைமாறாக இந்த கையூட்டைப் பெற்றதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 20 ஆண்டுச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.


Pengarang :