ANTARABANGSA

5,125 மலேசிய மாணவர்களுக்கு திவேட் பயிற்சி வழங்க 220 சீன நிறுவனங்கள் தயார்

பெய்ஜிங், மே 30- தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் (திவேட்) தொடர்பான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலப் பயிற்சிகளை மலேசிய மாணவர்களுக்கு வழங்க சீனாவின் 220 நிறுவனங்கள் 5,125 இடங்களை ஒதுக்கியுள்ளன.

மலேசியாவில் திவேட் பயிற்சித் துறையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்குரிய கேம் சேஞ்சர் எனப்படும் சூழலை மாற்றியமைக்கும் நிகழ்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய திறன்மிக்க தொழிலாளர் அமைப்பு மற்றும் சீனாவில் திவேட் தொடர்புடைய தொழில்துறை நிறுவனங்களான பீஃபாங் ஆட்டேமோட்டிவ் கல்விக் குழுமம் மற்றும் டாங் அனைத்துலக கல்விக் குழுமம் ஆகியவற்றுக்கிடையில் நேற்றிரவு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக இந்த கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள  கோட்டாவில் மலேசியாவில் உள்ள சீன மாணவர்களுக்கு 500 இடங்கள் மற்றும் இந்திய மற்றும் சபா, சரவா மாணவர்களுக்கு 200 இடங்களை  ஒதுக்கீடு செய்வதும் இதில் அடங்கும் என்று தேசிய திவேட் மன்றச் செயல்குழுவின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பின் வாயிலாக வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளில் இ.வி. எனப்படும் மின்சார வாகனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாகனம், ரோபோட்டிக், பொருள் இணையம் மற்றும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மூன்று மாத குறுகிய  காலப் பயிற்சியும் ஆறு மாத மத்திய காலப் பயிற்சியும் ஆறு மாதம் முதல் மூன்று வருடங்கள் வரையிலான நீண்ட காலப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய- சீன அனைத்துலக தொழில்துறை-திவேட் கல்விக் கழகத்தின் நிகழ்ச்சி  மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடம் சடங்கு ஆகியவற்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கி வரும் சனிக்கிழமை வரை ஜாஹிட் சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ வருகையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :