NATIONAL

ஆசியானுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக சாரா நவ ராணி நியமனம்

கோலாலம்பூர், மே 30 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ஆசியான்) மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக டத்தின் சாரா நவா ராணி அல் பக்ரி தேவதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சாரா, மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) ஒரு அறிக்கையில் கூறியது.

சாரா கடந்த 1994ஆம் ஆண்டு நிர்வாக மற்றும் இராஜதந்திர அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் தற்காப்பு அமைச்சில் பணியாற்றிய அவர் 1996 இல் விஸ்மா புத்ராவுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2017 முதல் 2020 வரை ஜெர்மனிக்கான மலேசியத் தூதராகப் பணியாற்றினார். அவரது மற்ற அரசதந்திரப் பணிகளில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான மலேசியாவின் நிரந்தர அலுவலகம் மற்றும் ஜாகர்த்தாவிலுள்ள ஆசியானுக்கான மலேசியாவின் நிரந்தர அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றியதும் அடங்கும்.

மேலும் அவர் விஸ்மா புத்ராவில் மனித உரிமைகள் மற்றும் மனிதநேயப் பிரிவின் துணைச் செயலாளராகவும், கொள்கை திட்டமிடல் மற்றும் வியூகத் துறையில் துணைத் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பிராந்திய விவகாரங்கள் மற்றும் கடல்சார் பிரிவில் முதன்மை உதவி செயலாளராகவும் சாரா பணியாற்றினார்.


Pengarang :