ANTARABANGSA

திவேட் கல்வித் திட்டத்தில் சேர எஸ்.பி.எம். தேர்வை எழுதாத மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அழைப்பு

பெய்ஜிங், மே 31- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வினை எழுதாத 10,160 மாணவர்கள் திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் திட்டத்தில்  கல்வியைத் தொடருமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான சிறந்த விடையாக திவேட் கல்வித் திட்டம் விளங்குவதால் மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபோதும் மனம் உடைந்து  போகக் கூடாது என்று அவர் சொன்னார்.

எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி கண்ட மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களை திவேட் கல்வித் திட்டம் ஏற்றுக் கொள்கிறது. திவேட் என்பது இரண்டாவது அல்லது மூன்றாவது தேர்வுதான் என்பது இதன் பொருளல்ல. மாறாக, கல்வியைத் தொடர (எஸ்.பி.எம். தேர்வை எழுதாத மாணவர்களுக்கு) இது இரண்டாவது வாய்ப்பாக அமைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வ வருகையின் ஒரு பகுதியாக இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

கல்வியில் சிறந்து விளங்காத மற்றும் எஸ்.பி.எம். தேர்வை எழுதாத மாணவர்களுக்கு இந்த திவேட் திட்டம் பொருத்தமானதாக விளங்குகிறது. காரணம், இது 70 விழுக்காடு பட்டறை மற்றும் ஆய்வக பயிற்சிகளையும் 30 விழுக்காடு வகுப்பறை படிப்பையும் வழங்குகிறது என்றார் அவர்.

கடந்த 2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்ற 383,685 மாணவர்களில் 10,160 பேர் தேர்வில் அமரவில்லை என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கடந்த மே 27ஆம் தேதி கூறியிருந்தார்.

மாணவர்களின் முதல் தேர்வாக திவேட் திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்த துறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் மலேசியாவிலுள்ள அனைத்து ஊடகங்களின் பிரதான ஆசிரியர்களின் உதவியை தாம் நாடவுள்ளதாகவும் ஜாஹிட் சொன்னார்.


Pengarang :