ANTARABANGSA

விரைவு பேருந்து ட்ரெய்லரை மோதியதில் ஐவர் காயம்- பிளஸ் நெடுஞ்சாலையில் சம்பவம்

ஈப்போ, மே 31- இன்று அதிகாலை  வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் (பிளஸ்)  290 வது கிலோமீட்டரில் விரைவுப் பேருந்து டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 5.16 மணிக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிம்பாங் பூலாய்  மற்றும் கோப்பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப்   பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதோடு மேலும்  நான்கு பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் நிகழும் போது அந்த பேருந்து 26 பயணிகளுடன்  தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் பஸ்சின் இடிபாடுகளில்  சிக்கியிருந்தவர்களை மீட்டு  காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும் மேல் சிகிச்சைக்காக  அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் காயமின்றித் தப்பியவர்கள் மற்றொரு விரைவுப் பேருந்தின் மூலம் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறிய அவர்,  இந்த மீட்புப் பணி  காலை 6.45 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது என்றார்.


Pengarang :