NATIONAL

பச்சிளம் குழந்தைக்கு முகத்தில் காயம்- பராமரிப்பாளர் துன்புறுத்தியதாக சந்தேகம்

கோலாலம்பூர், ஜூன் 4- பராமரிப்பாளரின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக
சந்தேகிக்கப்படும் 17 மாதப் பெண் குழந்தைக்கு முகத்தில் காயம்
ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் காஜாங், பண்டார் மக்கோத்தா செராசில்
உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தந்தையான 26 வயது
நபரிடமிருந்து இரவு 7.36 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜாஹிட் ஹசான்
கூறினார்.

அக்குழந்தையை திரும்ப அழைத்து வருவதற்காக அந்த மையத்திற்கு
சென்ற போது மற்ற ஆசிரியர்கள் அல்லது பராமரிப்பாளர்கள்
குழந்தையிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் உணவு ஊட்டும்
போது தலைமுடியை இழுத்ததோடு மூக்கையும் கிள்ளியதாகவும்
அங்கிருந்த பராமரிப்பாளர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இ-ஹெய்லிங்
வாடகை கார் ஓட்டுநரான அந்த ஆடவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்
என அவர சொன்னார்.

அந்த மையத்தில் இருந்த ஆசிரியர்கள் தன் குழந்தையிடம் நடந்து
கொண்ட விதம் குறித்து அதிருப்தியடைந்த காரணத்தால் அந்த
மையத்திற்கு தன் குழந்தையை அனுப்புவதை நிறுத்தி விட்டதாக அவர்
குறிப்பிட்டார் என முகமது ஜாஹிட் தெரிவித்தார்.

மருத்துவமனை ஒன்றில் அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில்
இலேசான திசு காயங்கள் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட
பராமரிப்பாளர் வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்திற்கு
அழைக்கப்பட்டார் என்றார் அவர்.

கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அந்த பராமரிப்பு மையம்
முறையான அனுமதியை கொண்டிருக்கவில்லை என்பது போலீசார்
மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் விசாரணை முற்றுப் பெற்றதும் மேல் நடவடிக்கைக்காக
அந்த அறிக்கை துணை சட்டத் துறை தலைவர் அலுவலகத்திற்கு
அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :