NATIONAL

மரணத்தை விளைவிக்கும் இன்ஃபுளுயென்ஸா தொற்று- ஆறு அடி இடைவெளியிலும் பீடிக்கும் அபாயம்

ஷா ஆலம், ஜூன் 4- இன்ஃபுளுயென்ஸா தொற்று உடல் நலத்திற்கு
பெரும் ஆபத்தை கொண்டு வரும் என சமூக சுகாதார நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர். இந்நோயின் தாக்கம் மூச்சுத் திணறல், காதுகளில் சீழ்
வடிதல், நுரையீரல் வீக்கம் ஆகிய பாதிப்புகளை உண்டாக்கி
மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறினர்.

இருமல் அல்லது தும்மலின் வாயிலாக ஆறு அடி அல்லது 1.83 மீட்டருக்கு
அப்பால் உள்ளவர்களையும் இந்நோய் வைரஸ் பீடிக்கும் என்று
பேராசிரியர் டாக்டர் ஷரிபா வான் பூத்தே விளக்கினார்.

காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை கொண்ட கோவிட்-19
நோய்த் தொற்றுடன் ஒத்திருக்கும் இந்த நோயின் பரவல் குறித்து பலர்
இன்னும் அறிந்திருக்கவில்லை என்று மலேசிய தேசிய
பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை நிபுணரான அவர் சொன்னார்.

இந்த வைரஸ் மூளை வரைச் சென்று கோவிட்-19 தொற்றுக்கான
நுரையீரல் வீக்கம், மூச்சுத் திணறல் போன்ற அதே அறிகுறிகளை
வெளிப்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் கோவிட்-19 மற்றும்
இன்ஃபுளுயென்ஸா ஆகிய இரு நோய்களும் ஒரே சமயத்தில் தாக்கும் என
அவர் தெரிவித்தார்.

இன்ஃபுளுயென்ஸா பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. அடிக்கடி
பரவக்கூடிய இன்ஃபுளுயென்ஸா ஏ பறவைகள் வாயிலாக மட்டுமின்றி
மனிதர்கள் மூலமாவும் பரவும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்றார்
அவர்.

சிறார்கள், பலவித நோய்களால் பீடிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும்
உடல் பருமனானவர்கள் இந்நோயின் தாக்கத்திற்கு தாக்கத்திற்கு ஆளாகும்
சாத்தியத்தை அதிகம் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :