ANTARABANGSA

காஸா மீது 70,000 டன் குண்டுகளை இஸ்ரேல் வீசியது- இரண்டாம் உலகப் போரின் அளவைத் தாண்டியது

இஸ்தான்புல், ஜூன் 5- கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை
காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் 70,000 டன்னுக்கும்
அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது
ட்ரெஸ்டன், ஹம்பர்க் மற்றும் லண்டனில் வீசப்பட்ட குண்டுகளின்
அளவை விட இது அதிகமாகும் என அனாடோலு ஏஜென்சி செய்தி
நிறுவனம் கூறியது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம்
தேதிக்கும் இடையிலான ஆறு மாதக் காலத்தில் காஸா மீது 70,000
டன்னுக்கு அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாக மனித உரிமை
கண்காணிப்பு அமைப்பான யூரோ-மெட் கடந்த ஏப்ரல் மாதம்
கூறியிருந்தது.

நில சீரமைப்புப் பணிகளுக்காக இஸ்ரேல் 70,000 டன் குண்டுகளை காஸா
தீபகற்பம் மீது வீசியது. இதன் விளைவாக தாங்கு மண்டலம் என
அழைக்கப்படும் தீபகற்பத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் சுமார்
ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அனைத்துக் கட்டிடங்களும்
தரைமட்டமாக்கப்பட்டன என்று ஜெனிவாவை தளமாகக் கொண்ட அந்த
மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.

கடந்த 1940 முதல் 1941 வரை ஜெர்மன் லண்டன் மீது 18,300 டன்
குண்டுகளை வீசியதாக நியுயார்க்கில் உள்ள பழஞ்சுவடி காப்பகம்
உள்ளிட்ட இடங்களில் பெறப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன.

அதே சமயம் 1943ஆம் ஆண்டு ஹம்பர்க்கில் 8,500 டன் குண்டுகள்
வீசப்பட்டதாக ஹம்பெர்க் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர் ஹெட்ரிக்
அல்தோப் ஃபெலோ கூறினார்.

ட்ரெஸ்டன் மீது 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,900 டன் குண்டுகளை
கூட்டணி நாடுகளின் படைகள் வீசின.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் காஸா
மீதான போரில் இதுவரை 36,500 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 83,000
பேர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :