ANTARABANGSA

இருபது ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஆயுத மோதல்களில் பலி

ஜெனிவா, ஜூன் 5- ஆயுத மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மரண எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு சராசரி 100 பேராக உள்ளது என்று பிரஸ் எம்ப்ளம் கேம்பெய்ன் (பி.இ.சி.) எனும் அமைப்பு கூறியது.

இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும் என்று ஜெனிவாவை தளமாக கொண்ட அந்த கண்காணிப்பு அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அதன் தலைவர் பிளெஸ்சி லெம்பென் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்களைப் புரிவோரின் மத்தியில் சட்டப்பாதுகாப்பு குணாதிசயம் மாறி வருவது எங்களின் மிகப்பெரிய கவலையாகும் என்று அவர் சொன்னார்.

கடந்த இருபது ஆண்டுகளில் வருடாந்திர மரண எண்ணிக்கையில் உச்சமாக இருப்பது ஆயுத மோதல்களாகும். கடந்த 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈராக் போர், 2011 இல் நிகழ்ந்த சிரியா போர், 2022 இல் நிகழ்ந்த உக்ரேன் போர் 2023 அக்டோபர் முதல் நிகழ்ந்த வரும் காஸா போர் ஆகியவையும் அவற்றில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் காஸா போரே ஊடகத் துறை எதிர்நோக்கிய மிக மோசமான அசம்பாவிதமும். மிக குறுகிய காலத்தில் (எட்டு மாதங்கள்) கிட்டத்தட்ட 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கடந்த 2011 முதல் 2020 வரை நிகழ்ந்த சிரியா உள்நாட்டுப் போரில் இறந்த ஊடகவியலாளர்களுக்கு இணையான எண்ணிக்கையை (130 பேர்) இது கொண்டுள்ளது.

பொதுவாக பார்க்கையில் மெக்சிகோ ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக விளங்குகிறது. கடந்த 2004 முதல் 2023 வரை அந்நாட்டில் 200 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :