NATIONAL

கடனைச் செலுத்துவதிலும் வீட்டை புனரமைப்பதிலும் கரைந்து போகும் இ.பி.எஃப். பணம்- நிபுணர் கருத்து

ஷா ஆலம், ஜூன் 5- ஓய்வு கால சேமிப்பான ஊழியர் சேம நிதிப் பணம் (இ.பி.எஃப்.) வெகு விரைவில் தீர்ந்து போவதற்கு கடனைத் திரும்பச் செலுத்துவது மற்றும் வீட்டை புனரமைப்பு செய்வது போன்றவை காரணங்களாக விளங்குகின்றன.

பிள்ளைகளுக்குச் செலவிடுவது, விருந்துகளை நடத்துவது மற்றும் அங்கீகாரம் இல்லாத துறைகளில் முதலீடு செய்வது போன்றவை அந்த “வட்டியில்லா வங்கியின் பணம்“ விரைவாக கரைந்து போவதற்கு இதர காரணங்களாக விளங்குகின்றன என்று பயனீட்டாளர் நிதி நிபுணர் ஒருவர் கூறினார்.

தாக்காபுல் காப்புறுதி பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தங்களின் மருத்துவச் சிகிச்சைக்காக இ.பி.எஃப். சேமிப்பை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சில சந்தாதாரர்கள் உள்ளனர் என்று பேராசிரியர் டாக்டர் முகமது ஃபாட்சில் சப்ரி தெரிவித்தார்.

சந்தாதாரர்களில் பலர் வீடு, வாகனம் மற்றும் தனிப்பட்ட கடன்களை அடைப்பதற்கு இ.பி.எஃப். பணத்தைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் முக்கிய நோக்கங்களுக்காக அந்த பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் சொன்னார்.

பணி ஓய்வுக்குப் பின்னர் சௌகரியமான வாழ்க்கை வாழ்வதற்கு பயன்படக்கூடிய இ.பி.எஃப். சேமிப்பு இதர காரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

போதுமான அளவு சேமிப்பு இல்லாத காரணத்தால் சந்தாதாரர்கள் பலர் முதுமை காலத்தில் வறுமையில் தள்ளாடுவதாகக் கூறிய அவர், இந்த கருத்து நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்ட போதிலும் பலர் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்றார்.

அங்கீகரிக்கப்படாத துறைகளில் ஒரு சிலர் முதலீடு செய்வதும் அந்த முதுமை கால சேமிப்பு கரைந்து போவதற்கு காரணமாக உள்ளது. லாபம் கிடைக்கா விட்டால் கூட பரவாயில்லை. முதலீடாக போட்ட பணத்தையும் அவர்கள் இழந்து விடுகின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :