ANTARABANGSA

குறைந்த பெரும்பான்மையில் பி.ஜே.பி. வெற்றி- மூன்றாம் தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்க தயாராகிறார் மோடி

புது டில்லி, ஜூன் 5 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுப் பூர்வ வெற்றியைப் பெற்று மூன்றாம் தவணைக்கான பிரதமராகப் பதவியேற்கத் தயாராகிறார். எனினும், நாட்டின் அரசியலில் இறுக்கமான பிடியை தன் வசம் வைத்திருக்கும் அந்த தலைவர் இந்த தேர்தலில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

மோடியின் ஆளும் பாரதீய ஜனதாக கட்சி (பி.ஜே.பி.) கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாக மக்களவையில் சொந்த பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

அதிபர் பாணியில் பிரசாரம் செய்த மோடி உலகத் தலைவர்கள் மத்தியில் உயர்ந்த பட்ச  செல்வாக்கை கொண்டிருந்தார். ஆயினும் தேர்தலின் தொடக்க அறிகுறிகள் தலைகீழாக மாறியுள்ளன.

பி.ஜே.பி. கட்சிக்கு கிடைத்த குறைந்த பெரும்பான்மை இடங்கள் மோடிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பின்னடைவாகும் என்று அந்த ஆளும் கட்சியை எதிர்த்து வரும் சிறிய அரசியல் அமைப்பின் தலைவரான யோகேந்திரா யாதவ் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் பதவியேற்றதிலிருந்து இந்து தேசியவாதத்தை தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரும் மோடி ஆளும் கூட்டணியின் கேள்விக்கு இடமில்லாத தலைவராக விளங்கி வருகிறார். நாடு ஏதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்கிறது என்ற கவலை அவரின் எதிர்ப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் டீ விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய மோடி கடந்த பத்தாண்டுகளில் முழு ஆதிக்கம் நிறைந்த தலைவராக உருவெடுத்துள்ளார். தாய் அமைப்பான ராஷ்ட்ரியா ஸ்வயம்சேவா சங்கம் கூட அவரை எதிர்க்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.


Pengarang :