SELANGOR

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் அதிகாலை 6.00 மணிக்கு 12.7 விழுக்காடு சீரடைந்தது

ஷா ஆலம், ஜூன் 6- பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காகப் பணி
நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர்
சுத்திகரிப்பு மையத்திலிருந்து நீரை விநியோகிக்கும் பணி இன்று
அதிகாலை 6.00 மணிக்கு 12.7 விழுக்காட்டை அடைந்தது.

பயனீட்டாளர்களின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் மற்றும் நீர் அழுத்தம்
ஆகியவற்றின் அடிப்படையில் நீர் விநியோக நேரம் மாறுபடும் என்று
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோகத் தடை காரணமாகப் பெட்டாலிங், கிள்ளான், ஷா
ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோல
சிலாங்கூர் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இன்று மாலை 3.00 மணிக்கு 20
விழுக்காட்டையும் மாலை 3.00 மணிக்கு 90 விழுக்காட்டையும் எட்டும் என
அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் விரைந்து கிடைப்பதற்கு
ஏதுவாக நீர் விநியோகம் கிடைக்கப் பெற்றவர்கள் நீர் சிக்கனமாகப்
பயன்படுத்தும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

பொது மக்கள் நீர் விநியோகம் தொடர்பான தகவல்களை பேஸ்புக்,
இண்ட்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளம் தவிர்த்து
https://waterupdates.airselangor.com/ என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து
கொள்ளலாம்

மேலும் 15300 என்ற தொலைபேசி எண்கள் அல்லது https://www.airselangor.com/
என்ற இணைப்பின் வாயிலாகவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தை
தொடர்பு கொள்ள முடியும்.


Pengarang :