NATIONAL

மாற்றுத் திறனாளியைத் தாக்கிய மெய்க்காப்பாளரிடம் புக்கிட் அமான் விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 6- இங்குள்ள ஹோட்டல் முகப்பிடத்தில் மாற்றுத்
திறனாளி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் பிரமுகர் ஒருவரின்
மெய்க்கப்பாளரிடம் விசாரணை நடத்தப்படுவதை புக்கிட் அமான்
உயர்நெறி மற்றும் தர பின்பற்றல் துறை (ஜிப்ஸ்) உறுதிப்படுத்தியது.

காவல் துறை உறுப்பினர் சம்பந்தப்பட்ட கட்டொழுங்கு விவகாரத்தை இந்த
விசாரணை மையமாகக் கொண்டுள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ
அஸ்ரி அகமது கூறினார்.

கட்டொழுங்கு தொடர்பான இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு இந்த
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான இ-ஹெய்லிங் வாடகை கார் ஓட்டுநர்
நேற்று காலை 11.00 மணியளவில் புக்கிட் அமானுக்கு
அழைக்கப்பட்டிருந்தார். வழக்கறிஞர் மற்றும் மொழி பெயர்ப்பாளருடன்
அவர் புக்கிட் அமான் வந்திருந்தார்.

பணியின் போது விதிமீறல் அல்லது தவறான நடத்தை சம்பந்தப்பட்டிருந்ததா என்பதை கண்டறிய நிலையான சீராக்க நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த விசாரணையை ஜிப்ஸ் மறுஆய்வு செய்யும் என்று அஸ்ரி சொன்னார்.

விசாரணை தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளதோடு விசாரணையை
முழுமைப்படுத்துவதற்கு இதர சாட்சிகளையும் ஜிப்ஸ் அழைக்கும் என
அவர் குறிப்பிட்டார்.

எந்த சமரசப் போக்கிற்கும் இடமின்றி இந்த விசாரணை வெளிப்படையாக
நடத்தும் கடப்பாட்டை தாங்கள் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கியப் பிரமுகர் ஒருவரின் பரிவாரத்தில் இடம் பெற்றிருந்த நபர்
ஒருவரால் தாம் தாக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாற்றுத்
திறனாளி போலீசில் புகார் செய்துள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா கடந்த மே 29ஆம் தேதி கூறியிருந்தார்.

எனினும், அதே தினம் இரவு 9.59 மணியளவில் இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க விரும்புவதோடு வழக்கையும் தொடர விரும்பவில்லை எனக் கூறிய பாதிக்கப்பட்ட நபர் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.


Pengarang :