NATIONAL

பத்து பூத்தே விசாரணை பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்- நீதிமன்றத்தில் டாக்டர் மகாதீர் மனு

கோலாலம்பூர், ஜூன் 6 – பத்து பூத்தே, மிடல் ரோக்ஸ் மற்றும் சவுத் லெட்ஸ் ஆகிய தீவுகளின் இறையாண்மை விவகாரத்தைக் கையாண்டது தொடர்பான அரச விசாரணை மன்றத்தின் (ஆர்.சி.ஐ.) விசாரணை பகிரங்கமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் நீதித் துறை சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விசாரணையை வெளிப்படையாக நடத்துவதில்லை என்ற ஆர்.சி.ஐ.யின் முடிவு நியாயமானதல்ல என்று தனது மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் சேர்த்துள்ள அப்பிடவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராபிக்  வழக்கறிஞர் நிறுவனம் சார்பாக தாக்கல் செயதுள்ள இந்த சீராய்வு மனுவில் ஆர்.சி.ஐ. தலைவர் துன் முகமது ராவுஸ் ஷாரிப் மற்றும் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஜைனுன் அலி ஆகியோரை முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மூன்றாவது முதல் எட்டாவது வரையிலான பிரதிவாதிகளாக ஆர்.சி.ஐ. உறுப்பினர்களான டத்தோ பல்ஜிட் சிங் சீடு, டத்தோ ஜோஹான் சம்சுடின் சபாருடின், பேராசிரியர் ஃபாரிடா ஜாலில், முகமது ரிட்ஹா ஹாம் அப்துல் காடீர், துவான் ஹாய் டிக்சன் டேலா மற்றும் ஆர்.சி.ஐ. செயலாளர் ஜம்ரிய மிஸ்மான் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.சி.ஐ. விசாரணை நடத்தும் விவகாரத்தில் தொடர்புடைய நபர் என்ற முறையில் 1950ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் தாம் இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இது தவிர, ஆர்.சி.ஐ. தலைவராக முகமது ராவுஸ் செயல்படுவதை தடுக்கும் அதே வேளையில் ஆர்.சி.ஐ. உறுப்பினர் அந்தஸ்திலிருந்து பல்ஜிட் மற்றும் ரிட்ஹா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தமக்கும் ராவுஸூக்கும் இருக்கும் பகைமை போக்கு காரணமாக ஆர்.சி.ஐ. தலைவராக அவர் நியமனம் பெற்றது ‘ஒருதலைப்பட்சத்திற்கான உண்மையான ஆபத்தை‘ உருவாக்கும். இது இந்த விசாரணையில் ராவுஸின் பாரபட்சமற்ற நிலைப்பாட்டையும் பாதிக்கும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :