NATIONAL

இஸ்ரேலிய கொடி ஸ்டிக்கரை உணவகத்தில் ஒட்டிய ஆடவருக்கு 100 வெள்ளி அபராதம்

காஜாங், ஜூன் 7- துரித உணவகம் ஒன்றில் இஸ்ரேலிய கொடியின் படம்
பொறித்த ஒட்டு வில்லையை (ஸ்டிக்கர்) ஒட்டிய குற்றத்தை ஒப்புக்
கொண்ட கார் வாடகை நிறுவனம் ஒன்றின் பகுதி நேர ஊழியருக்கு
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்த த் தவறினால் ஒரு நாள்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நுருள்
ஹஃப்சான் அப்துல் அஜிஸ் தனது தீர்ப்பில் கூறினார். எனினும்
குற்றஞ்சாட்டப்பட்டவரான தாரிக் ஹஸிம் முகமது யூஸ்ரி (வயது 25)
அபராதத் தொகையைச் செலுத்தினார்.

தண்டனையை வழங்குவதற்கு முன் “நீங்கள் ஏன் இஸ்ரேலிய கொடி
ஸ்டிக்கரை ஒட்டினீர்கள்?“ என்று மாஜிஸ்திரேட் தாரிக் ஹஸிமிடம்
கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ‘எனது குடும்ப உறுப்பினர்களில் சிலர்
பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து அந்த துரித
உணவகத்தில் அக்கொடியை ஒட்டினேன்“ என்று பதிலளித்தார்.

“உங்கள் செயல்களால் ஏற்படும் பின்விளைவுகளை நீங்கள் கருத்தில்
கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்வதனால் நிலைமை
சரியாகிவிடப் போவதில்லை“ என்று மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் 29ஆம் தேதி மாலை 5.42 மணியளவில் ஜாலான் உலு
லங்காட, பத்தாவது மைலில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பொது
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அக்குற்றத்தைப் புரிந்ததாக
அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 100 வெள்ளி அபராதம் விதிக்க
வகை செய்யும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின்
கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.


Pengarang :