NATIONAL

ஜைன் ரய்யான் பெற்றோருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 7-  ஆட்டிஸம் குறைபாடு கொண்ட  ஜைன் ரய்யான் அப்துல் மதின் என்ற சிறுவனின் கொலை வழக்கு தொடர்பான  விசாரணைக்கு உதவும் பொருட்டு அவனது  பெற்றோருக்கு எதிரான தடுப்புக் காவலை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அவ்விருவரையும் வரும் புதன்கிழமை (ஜூன் 12) வரை காவலில் வைக்க  மாஜிஸ்திரேட் ஐனா முகமது  கமால் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதை  தம்பதியினரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஃபாஹ்மி அப்துல்  மொயின் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் இந்த தடுப்புக் காவல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதே நேரத்தில் குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர்  கூறினார்.

முன்னதாக, இந்த கொலை வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக அச்சிறுவனின் பெற்றோர் ஜூன் 1 முதல் இன்று வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சரா டாமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஓடையில் ஜைன் ரய்யானின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டிஸம் குறைபாடு  கொண்ட அச்சிறுவனின் உடல் மீது மேற்கொள்ளப்பட்டச் பரிசோதனையில் அவர்  கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது.  தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான அறிகுறியாக அச்சிறுவனின்  கழுத்து மற்றும் உடலில்  காயங்கள் காணப்பட்டன.


Pengarang :