NATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல்-ஒற்றுமை அரசின் வேட்பாளர் பெயர் புதன் கிழமை அறிவிக்கப்படும்

நிபோங் திபால், ஜூன் 10- சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயர் வரும் ஜூன் 12ஆம் தேதி (புதன் கிழமை ) அறிவிக்கப்படும்.

வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட அந்த வேட்பாளரின் பெயர் ஒற்றுமை அரசின் மத்திய மன்றத்திடம் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

வேட்பாளரின் பெயர் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்  கட்சி  தேர்தல் கமிட்டியின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்த வேட்பாளரின் தகுதி தொடர்பான ஆய்வினை பினாங்கு மாநில தலைமைத்துவ மன்றம் மேற்கொண்டது என்று அவர் சொன்னார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயரை நடப்பிலுள்ள நடைமுறைக்கேற்ப ஒற்றுமை அரசின் மன்றத்திடம் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்வோம். இதுதான் நடைமுறையாகும். அந்த இடைத் தேர்தலில் கெ அடிலான் கட்சி போட்டியிட்டாலும் கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகளின் ஒப்புதலும் தேவை என்று அவர் விளக்கினார்.

நேற்றிரவு இங்கு சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்  கூட்டணிக்கு ஒரு எளிதான களம் அல்ல. எனினும், பெரிக்காத்தான் நேஷனலிடம் சிறிது காலம் ‘இரவலாக‘ கொடுத்திருந்த அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இடைத் தேர்தலுக்கான பி.கே.ஆர். கட்சியின் தேர்தல் இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

வெற்றி வாய்ப்பைக் குறைவாக கொண்டவர்கள் என்ற நிலையில் இந்த இடைத் தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இருந்த போதிலும் பெரிக்காத்தான் நேஷனல் இடம் இரவலாகக் கொடுத்த இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என நம்புகிறேன் என்றார் அவர்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் நோர் ஜம்ரி லத்திப் நோய் காரணமாக கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :