NATIONAL

முறைகேடுகளைக் கண்டும் காணாதிருக்கும் துறைத் தலைவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது

புத்ராஜெயா, ஜூன் 10 – தங்களின் கீழ் பணி புரியும் அரசு ஊழியர்கள்
புரியும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்காமலிருக்கும் துறைத்
தலைவர்களுக்கு இனி பதவி உயர்வு வழங்கப்படாது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தங்கள் நிர்வாகத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து துறைத் தலைவர்கள்
அல்லது பிரிவுத் தலைவர்கள் அறியாமலிருப்பதற்கு சாத்தியமே இல்லை
என்று இன்று இங்கு பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர ஒன்று
கூடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

தவறுகள் நிகழ்வது வெளிப்படையாகத் தெரியும் போது துறைத்
தலைவர்கள் ஏன் அது குறித்து புகார் செய்வதில்லை. பிரிவுத் தலைவர்கள்
ஏன் அதனை அறிந்திருப்பதில்லை. ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும்
இத்தகையச் செயல்களை தெரியாமலிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று
நான் நினைக்கிறேன் என்றார் அவர்.

தங்கள் அதிகாரத்திற்கு கீழ் நிகழும் முறைகேடுகள் குறித்து புகார் செய்யத்
தவறும் துறைத் தலைவர்கள் அல்லது பிரிவுத் தலைவர்களுக்கு பதவி
உயர்வு அளிப்பதில்லை என்பது தொடர்பான முடிவினை விரைவில்
நடைபெறவிருக்கும் சம்பள உயர்வு மீதான கூட்டத்தின் போது அரசாங்கத்
தலைமைச் செயலாள டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலியிடம் நான்
பரிந்துரைக்கவிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

சம்பள உயர்வு தொடர்பான விவகாரத்தில் ஒரு முடிவினை அடுத்த வாரம்
எடுக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் இது குறித்த
செயல்முறைகளை முகமது ஜூக்கியும் பொதுச் சேவைத் துறை தலைமை
இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமது டாஹ்லான் அப்துல் அஜிசும்
விளக்குவார்கள் என்றும் அன்வார் தெரிவித்தார்.

சகோதர, சகோதரிகளே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
கூடுதல் சுமை கருதி துறைத் தலைவர் அல்லது பிரிவுத் தலைவர் பதவி
வேண்டாம் என்றால், “துறை தலைவர் அல்லது பிரிவுத் தலைவர் பதவி
எனக்கு வேண்டாம். நான் சாதாரண அதிகாரியாகவே இருந்து விடுகிறேன்“
என்று பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநரிடம் கூறி விடுங்கள்.

இது, அரசாங்கம் ஊழியர்களின் தோற்றம் மற்றும் உயர் நெறி சார்ந்த
விஷயமல்ல. மாறாக, நாட்டைக் காப்பாற்ற வேண்டிய ஒரு விஷயமாகும்.
மலேசியா ஊழல் அல்லாத அல்லது குறைந்த பட்ச ஊழல் கொண்ட நாடு
என்ற பெயரைப் பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்றார்
அவர்.


Pengarang :