NATIONAL

உணவு வணிகர்கள் சிறப்பு தள்ளுபடி அட்டை மூலம் ரஹ்மா மெனுவை வழங்க ஊக்குவிப்பு

கோத்தா பாரு, ஜூன் 10: சிறப்பு தள்ளுபடி அட்டை மூலம் ரஹ்மா மெனுவை வழங்க அதிக உணவு வணிகர்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

இதுவரை 117 உணவு வணிகர்கள் இந்த தள்ளுபடி அட்டைக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் அவர்களில் 64 பேர் கிளந்தனில் உள்ள வர்த்தகர்கள் ஆவர் என துணை அமைச்சர் ஃபெளசியா சாலே தெரிவித்தார்.

இந்த அட்டையின் மூலம், நாடு முழுவதும் உள்ள ஏழு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் மூலோபாய கூட்டாளர்கள் பல்பொருள் அங்காடிகளில் வணிக அத்தியாவசிய பொருட்களின் விலையில் 40 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

“…ஒரே ஒரு ரஹ்மா மெனுவை வழங்குவதன் மூலம், வணிகர்கள் இந்த அட்டையைப் பெற தகுதியுடையவர்கள். எனவே, இந்த சலுகையின் மூலம் அதிகமான உணவு வணிகர்கள் ரஹ்மா மெனுவைத் தயாரிப்பதில் ஈடுபடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் அதிகமான மக்கள் பயனடையலாம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது அட்டைகளின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதாகவும், வர்த்தகர்களுக்கான தள்ளுபடிகளை அமைச்சகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாகவும் ஃபெளசியா கூறினார்.

சிறப்பு அட்டையைப் பெறுவதற்கான செயல் முறையை எளிதாக்கும் அணுகுமுறையையும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதனால் முந்தைய பல்வேறு நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது இந்த நடவடிக்கை வேகமாக செயல்படும்.

“முன்னதாக, இந்த அட்டையைப் பெறுவதற்கான செயல்முறை நீண்ட காலம் எடுத்தது மற்றும் நசிரான் உட்பட பல நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால், பல வணிகர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை.

“இந்த புதிய முறையின் மூலம் அனைத்து ரஹ்மா மெனு வணிகர்களும் தள்ளுபடி அட்டையை பதிவு செய்து மீண்டும் மக்களுக்கு சேவையை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, சிறப்புத் தள்ளுபடியில் பல்பொருள் அங்காடிகளின் ஈடுபாட்டை விரிவுபடுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் முயற்சிக்கும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :