NATIONAL

உள்நாட்டு வர்த்தக அமைச்சின் சோதனையில் பெர்மிட் இன்றி டீசல் வாங்கிய குத்தகையாளர் கைது

தும்பாட், ஜூன் 10- முறையான பெர்மிட் இன்றி பாச்சோக், தாவாங் வாக்காப் ஆய்க் பெட்ரோல் நிலையத்தில் 15 தோம்புகளில் டீசலை வாங்கிய குத்தகையாளர் ஒருவரை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

நேற்றிரவு 9.00 மணியளவில் அந்த பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பை மேற்கொண்ட அமலாக்க அதிகாரிகள் குழு 29 வயதுடைய அந்த குத்தகையாளரைக் கைது செய்ததாக அமைச்சின் கிளந்தான் மாநில இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

உதவித் தொகை இல்லாத டீசல் லிட்டர் ஒன்றுக்கு வெ.3.35 விலையில் விற்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு அமலாக்கம் காண்பதற்கு சில மணி நேரம் இருக்கையில் இந்த டீசல் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த குத்தகையாளர் டோயோட்டா ஹைலக்ஸ் ரக நான்கு சக்கர இயக்க வாகனத்தில் அந்த  பெட்ரோல் நிலையத்திற்கு வந்ததாக நேற்றிரவு பாசீர் பெக்கானில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அந்த வாகனத்தில் இருந்த 15 தோம்புகளையும் நாங்கள் கைப்பற்றினோம். 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த தோம்புகளில் ஆறில் டீசல் நிரப்பப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்வாடவர் கடன்பற்று அட்டையை பயன்படுத்தி அந்த டீசலை வாங்கியுள்ளார். விவசாய நோக்கத்திற்காக அவர் டீசலை வாங்கிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஒவ்வொரு வாகனமும் கூடுதல் பட்சம் 100 வெள்ளி மதிப்புள்ள டீசலை மட்டுமே வாங்க முடியும் என நிபந்தனை விதித்ததற்காக அதே பெட்ரோல் நிலையத்திலிருந்து ஆவணங்களை அமைச்சு பறிமுதல் செய்ததாக அவர் அஸ்மான் சொன்னார்.

டீசல் கையிருப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால் தாங்கள் இந்த கட்டுப்பாட்டை விதித்ததாக அந்த பெட்ரோல் நிலைய பொறுப்பாளர்கள் கூறினர் என்றார் அவர்.


Pengarang :