NATIONAL

நாட்டைக் காப்பாற்ற இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டம் அவசியம்- பிரதமர் கூறுகிறார்

புத்ராஜெயா, ஜூன் 10- நாட்டைக் காப்பாற்றுவதற்கு இலக்கிடப்பட்ட டீசல்
மானியத் திட்டம் அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் வலியுறுத்தினார்.

வரவேற்கப்படாத ஒரு நடவடிக்கையாக இது விளங்கினாலும் அதனை
அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று இன்று இங்கு நடைபெற்ற பிரதமர்
துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
சொன்னார்.

நாம் எதைச் செய்தாலும் நாம் அவதூறு மற்றும் பொய்யான
குற்றச்சாட்டுகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவோம் என்பதை
உணர்ந்திருக்கிறோம்.

முன்பிருந்த அனைத்து பிரதமர்களும் இலக்கிடப்பட்ட உதவித் தொகை
திட்டத்திதை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக
வேண்டும். எனினும் இதில் உள்ள விளைவுகள் காரணமாக அதனை
அல்படுத்துவதற்கான அரசியல் முனைப்பு யாருக்கும் இல்லாமல்
போய்விட்டது. இருப்பினும், நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதால்
நமக்கு வேறு வழியே கிடையாது என்று நிதியமைச்சருமான அவர்
தெரிவித்தார்.

நேற்று பின்னிரவு 12.01 மணி தொடங்கி தீகபற்ப மலேசியாவில் உள்ள
அனைத்து சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் டீசல் விலை
வெ.3.35ஆக நிர்ணயிக்கப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

தானியங்கி விலை செயல்முறையின் அடிப்படையில் 2024 மே
மாதத்திற்கான உதவித் தொகை அல்லாத சராசரி சந்தை விலையின்
அடிப்படையில் இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக இரண்டாவது
நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் கூறியிருந்தார்.

டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் இந்த
நடைமுறை மூலம் ஆண்டுக்கு 400 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த
முடியும் என்பதோடு இதன் மூலம் நாட்டின் நிதி நிலைமையை நீண்ட
கால அடிப்படையில் வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.


Pengarang :