ANTARABANGSA

இந்தியாவின் பிரதமராக மூன்றாம் தவணைக்குப் பதவியேற்றார் நரேந்திர மோடி

புது டில்லி, ஜூன் 10 – நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாம்
தவணைக்கு நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். உலகில்
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் அண்மையில்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சியூட்டும் வகையில் பெரும்
பின்னடைவை அவரது பாரதீய ஜனதாக கட்சி (பி.ஜே.பி.) சந்தித்தது.

கூட்டணி அரசாங்கத்தில் தனது கொள்கையை நிலைநிறுத்தும் அவரது
ஆற்றலை சோதிக்கும் களமாக இந்த தேர்தல் முடிவு விளங்குகிறது.

புது டில்லியில் உள்ள அதிபர் மாளிகையான ராஷ்டபதி பவனில் நேற்று
அதிபர் துரோபதி மர்மு முன்னிலையில் மோடி பிரதமராகப் பதவியேற்றுக்
கொண்டார். இந்த நிகழ்வில் ஏழு வட்டார நாடுகளைச் சேர்ந்த
தலைவர்கள், பிரமுகர்கள், பாலிவூட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள்
உள்பட ஆயிரணக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

“பாரதத்திற்கு சேவையாற்றும் கௌரவம்“ என மோடி பதவியேற்பதற்கு
முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில்
கூறியிருந்தார்.

வெள்ளை நிற குர்தா மற்றும் நீல நிற மேலாங்கி அணிந்திருந்த 73 வயது
மோடியை பதவி பிரமாணம் எடுக்க அழைத்த போது அவரின்
ஆதரவாளர்கள் ‘மோடி‘, ‘மோடி‘ என முழக்கமிட்டனர்.

மோடியைத் தொடர்ந்து முந்தைய அரசாங்கத்தில் பதவியில் இருந்த
அமைச்சர்களில் சில பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

அவர்களுக்கான துறை பதவி பிரமாணச் சடங்கிற்குப் பின்னர்
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த குருவாக விளங்கும் இந்து தேசிய
வாத அமைப்பான ராஷ்ட்ரியா ஸ்வயம்ஷேவாக் சங் அமைப்பின் மூலம் தனது பொது வாழ்க்கையைத் தொடக்கிய மோடி ஜவஹர்லால் நேருக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதர் பதவியை வகித்தவராக விளங்குகிறார்.

கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த பல கட்டத் தேர்தலுக்குப் பின்னர் 14 பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து மோடி அரசாங்கத்தை அமைத்துள்ளார்.


Pengarang :