NATIONAL

விவசாயக்  கண்காட்சியின் வழி வெ.600 கோடி ஒப்பந்தங்களைப் பெறத் திட்டம்

செர்டாங், ஜூன் 10 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும்  மலேசியா விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா (மஹா) கண்காட்சி 600 கோடி வெள்ளி மதிப்பிலான  ஒப்பந்தங்களையும், 400 கோடி வெள்ளி  நேரடி விற்பனையையும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 1923ஆம் ஆண்டு  முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்   மஹா கண்காட்சிக்காக அடைவு நிலைக்கான குறியீடு (கே.பி.ஐ.) அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியில் இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வின் 100 ஆண்டுகால வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, புதுமைகளை அறிமுகப்படுத்துவது, விவசாயத் துறையின் பல்வேறு பங்களிப்பாளர்கள் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பது,  நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது  ஆகியவற்றில் மஹா முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் இன்று மஹா 2024 கண்காட்சியை  தொடக்கி வைத்தபோது கூறினார்.

“கனவுகள் மலரும் நாளை அறுவடை” என்பது மஹா 2024 கண்காட்சியின் கருப்பொருளாகும்.

இந்த மஹா கண்காட்சியின் மூலம்  உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முகமது சாபு குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஃபார்மிங் எனப்படும் விவேக வேளாண் முறை, பெரிய தரவு பயன்பாடு மற்றும் தானியங்கி போன்ற புதுமைகளின் பயன்பாட்டை நேரடியாக காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த முறை இலக்கு வைக்கப்பட்ட கண்காட்சியாளர்களின் எண்ணிக்கை 2,000 நிறுவனங்களைத் தாண்டியுள்ளதால் இந்த மஹா 2024  கண்காட்சி உள்ளூர் விவசாயப் பொருட்களை அனைத்துலகச் சந்தைக்கு விரிவுபடுத்துவதற்கான ஒரு தளமாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.


Pengarang :