NATIONAL

வங்கிக் கணக்கில் எதிர்பாராதத் தொகை-விளக்கமளிக்கத் தவறிய குத்தகையாளருக்கு அபராதம்

கோலாலம்பூர், ஜூன் 11 – இரு மாதங்களுக்கு முன்பு தனது வங்கிக் கணக்கில்  சேர்க்கப்பட்ட 114,000 வெள்ளி  குறித்து விளக்கம் அளிக்கத் தவறியதற்காக வீட்டை புதுப்பிக்கும் குத்தகையாளர் ஒருவருக்கு  1,000 வெள்ளி அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால்  மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதித்து  இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

ஒரு நபரிடமிருந்து திருடப்பட்டதாக அல்லது மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பணத்தை வைத்திருந்ததாகவும் அது எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறியதாகவும் கொண்டுவரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை 37 வயதான முஹம்மது சாதிக் நா’மான் ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி அஸ்ருல் டாருஸ் இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை பத்து கேவ்ஸ்,  தாமான் கோப்பராசி போலீஸில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்தததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது 1,000  வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே  அபராதம் விதிக்க வகை செய்யும் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 29 (1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

எனினும், தனது வங்கிக் கணக்கில் போடப்பட்ட மற்றொரு நபருக்கு சொந்தமான  200,000 வெள்ளி  பணத்தை மாற்றியது அல்லது மறைத்தது தொடர்பான பிரதானக்  குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த மார்ச் 21ஆம் தேதி பிற்பகல் 3.31 மணியளவில் செந்தூலில் உள்ள தாமான் டேசா சிகாம்புட்டில்  குற்றத்தைச் புரிந்ததாகத் தண்டனைச் சட்டத்தின் 424வது பிரிவின் கீழ்  அவர் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சாதிக்கை ஒரு நபர்  உத்தரவாதத்துடன்  3,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி,  இந்த வழக்கு விசாரணையை  ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :