NATIONAL

எரிபொருள் பற்றாக்குறை காரணமாகக் காஸாவிலுள்ள ஆக்ஸிஜன் ஆலை மூடப்படும் அபாயம்

காஸா நகர், ஜூன் 11-  எரிபொருள் பற்றாக்குறை காரணமாகக் காஸா நகரில் செயல்பட்டு வரும் ஒரே ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை  மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

காஸா நகரில் உள்ள ஆக்ஸிஜன் ஆலை ஒரு சில மணி நேரங்களில்  மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரணம் ஏற்படும் சாத்தியம் உள்ளது  என்று அமைச்சின் அறிக்கையை மேற்கோள்காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான டீசல் பற்றாக்குறையால் குளிர்சாதனப் பெட்டிகளில் சேமிக்கப்படும் மருந்துகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக அமைச்சு எச்சரித்தது.

காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும்  முக்கிய பாதையான ராஃபா எல்லையின் பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேலியப் படைகள் கடந்த மாதம் கைப்பற்றின. இதனால் இப்பகுதியில்   நிலைமை மேலும் மோசமாகியது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள்  காரணமாக இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள  எஞ்சிய மருத்துவமனைகளையும் இயக்க முடியாமல் போய்விட்டது.

கடந்தாண்டு  அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் காஸா மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை 37,120 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 84,700 பேர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :