NATIONAL

உணவில் நச்சுத்தன்மை- புதிய சம்பவங்கள் தொடர்பில் மாநில சுகாதாரத் துறை விசாரணை

ஷா ஆலம், ஜூன் 12- கோம்பாக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற
சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 30 தொடக்கப் பள்ளி
மாணவர்களை பாதித்த நச்சுணவு தொடர்பான புதிய சம்பவங்களை
அடையாளம் காண சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை
விசாரணையைத் தொடக்கியுள்ளது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் யாருக்கேனும் நோய்க்கான
அறிகுறி தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்றுக் கொள்ளும்படி மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி
கல்தோம் சம்சுடின் கேட்டுக் கொண்டார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 247 பேரில் இருவர் உயிரிழந்த வேளையில்
மேலும் 82 பேர் பாதிப்புக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை
சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் நிர்வாகப் பிரிவினர், ஆசிரியர்கள், பள்ளிப்
பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். வயிற்றுப்
போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற
அறிகுறிகளை அவர்கள் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

நச்சுணவு பிரச்சனை ஏற்பட்டதற்கு வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட
உணவு விநியோகிப்பாளர்கள் தயார் செய்திருந்த பீகூன் மற்றும் ஒரு
பக்கம் பொறிக்கப்பட்ட முட்டை ஆகியவை காரணம் என
சந்தேகிக்கப்படுறது. அந்த உணவின் தோற்றமும் ருசியும் முற்றிலும்
மாறியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாதிப்புகள் காரணமாக 28 பேர் மருத்துவமனையில்
வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றதாக கூறிய உம்மி கல்தோம், யாரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றார்.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சம்பவ
இடத்திலிருந்து எடுக்கப்பட்ட உணவின் மாதிரி சுங்கை பூலோவில் உள்ள
தேசிய பொது சுகாதார ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்
பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :