NATIONAL

சிங்கைப் பிரதமர் மலேசியாவுக்கு இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம்

சிப்பாங், ஜூன் 12 –  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக  இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சிங்கை பிரதமர் லோரன்ஸ் வோங்  நேற்று  மலேசியா வந்தடைந்தார்.

தனது பேராளர் குழுனருடன் கோலாலம்பூர்  நேற்றிரவு 8.50 மணியளவில்  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முதலாவது முனையம் வந்தடைந்த அவரை  வெளியுறவு அமைச்சின்  மரபு நெறிமுறைத் தலைவர் டத்தோ முகமது ஐனி அதான்  வரவேற்றார். மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனனும் உடனிருந்தார்.

சிங்கைப் பிரதமருக்கு  கேப்டன் ஆடாம் அஸ்மான்  தலைமையிலான அரச  ரேஞ்சர் ரெஜிமென்ட் முதல் பட்டாளம் அணிவகுப்பை நடத்தி மரியாதைச் செலுத்தியது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹின் அழைப்பின் பேரில்   லோரன்ஸ்  வோங் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த  மே மாதம்  15ஆம் தேதி  சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும்  முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தில் வோரன்ஸ் வோங்குடன் அவரது மனைவி லூ டிஸே லூய், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொடர்பு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ரஹாயு மஹ்ஜாம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பயணத்தின் போது மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்  இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த  பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்தும்  இரு தலைவர்களும்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

துணைப் பிரதமர்களான  டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோரையும் இந்த பயணத்தின் போது வோங் சந்திக்க உள்ளார்.

கடந்த 2023ஆம் ஆணாடில்  மலேசியாவும்  மற்றும் சிங்கப்பூரும்  இரண்டாவது பெரிய உலகளாவிய வர்த்தக பங்காளிகளாக இருந்தன. ஆசியான் நாடுகளில் சிங்கப்பூர் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு 36,313 கோடி வெள்ளி   (7,960 கோடி அமெரிக்க டாலர்) ஆகும்.


Pengarang :