NATIONAL

டீசல் இலக்கு மானியம் சரியான, தைரியமான நடவடிக்கை-திரங்கானு மந்திரி புசார் பாராட்டு

ஷா ஆலம், ஜூன் 13-  கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட  டீசல் மானியத் திட்டம் சரியான மற்றும் துணிச்சலான நடவடிக்கை என்று திரங்கானு மாநில  அரசு வர்ணித்துள்ளது.

எனினும், இதன் அமலாக்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்க  வேண்டும் என்று மந்திரி புசார் அகமது சம்சூரி மொக்தார் கூறியதாக ஹரியான் மெட்ரோ நாளேடு தெரிவித்துள்ளது.

எங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத நிறுவனங்கள் உட்பட கவனிக்கப்படாமல் போகும்  கசிவு மற்றும் வீண் விரயப் பிரச்சனையை சமாளிக்க மானிய இலக்கு செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.

இருப்பினும், அதில் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்சனைகளுக்கு  மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று  கெமமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

மத்திய அரசு,  டீசலின்  விலையை கடந்த திங்கட்கிழமை முதல்   லிட்டருக்கு 3.35 வெள்ளியாக அறிவித்தது. இதற்கு முன்பு இந்த எரிபொருளின் விலை  லிட்டருக்கு வெ.2.15 ஆக  இருந்தது.

டீசல் மானியத்தை இலக்காகக் கொண்டு ஆண்டுக்கு 400 கோடி வெள்ளி வரை  மிச்சப்படுத்த முடியும்.  மக்களுக்கான சேவைத் தரத்தை மேலும் மேம்படுத்த விரிவான நிதி வாய்ப்பினை அரசாங்கத்திற்கு இத்திட்டம் வழங்கும்.

டீசல் விலை  திடீர் அதிகரிப்பின் தாக்கத்தை  சில சேவை வழங்குநர்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தியாளர்களால் உணரத் தொடங்கியுள்ளதால்  மக்கள் மீதான சங்கிலித் தொடர்  விளைவுகளைக்  குறைக்க டீசல் மானியங்களுக்கு இலக்கு வைப்பது கட்டம் கட்டமாக செய்யப்பட வேண்டும் என்று சம்சூரி கூறினார்.

இதனைச் சமாளிப்பது மத்திய அரசுக்கு மிகப் பெரிய சவாலான பணியாகும். இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பது எளிதல்ல. ஆயினும் மத்திய அரசு நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :