NATIONAL

போர் நிறுத்தப் பரிந்துரைக்கு மலேசியா ஆதரவு-  அமெரிக்கா பாராட்டு

புத்ராஜெயா, ஜூன் 13-  காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை ஆக்ககரமான முறையில் வழங்குவதற்குப் போர் நிறுத்தம் முக்கியம் என்பதை மலேசியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜோர்டானில் நடைபெற்ற “நடவடிக்கைக்கு அழைப்பு:  காஸாவுக்கு உடனடி மனிதாபிமான உதவி” என்ற உயர்மட்ட நிலையிலான மாநாட்டின் இடைவேளையின் போது வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இடையே நடந்த சந்திப்பில் இந்த  உடன்பாடு எட்டப்பட்டதாக அது தெரிவித்தது.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின்  பாதுகாப்பு மன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததற்காக ஆசியான் மையத்திற்கான அமெரிக்காவின் ஆதரவையும் மலேசியாவிற்குப் பாராட்டுகளையும் பிளிங்கன் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 11ஆம் தேதி  ஜோர்டானின் சாக்கடலில் உள்ள கிங் ஹுசைன் பின் தலால் மாநாட்டு மையத்தில்  நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிற்கு மலேசியத் தூதுக்குழுவுக்கு தலைமையேற்று  முகமது  ஜோர்டான் சென்றுள்ளார்.

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காக ஜோர்டான், எகிப்து மற்றும் (ஐ.நா.) ஆகியவை  இந்த உயர்மட்ட மாநாடு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் நாட்டுத் தலைவர்கள்/அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சர்வதேச அமைப்புகள் மற்றும் பங்களிப்பாளர்கள் உள்பட மொத்தம் 75 பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

இம்மாநாட்டின் போது, ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் 2735வது (2024)  தீர்மானத்தை முகமது ஹசான் வரவேற்றார். நிரந்தர மற்றும் பயனுள்ள போர்நிறுத்தம், உடனடி மனிதாபிமான உதவிகளை  தடையின்றி விநியோகம் செய்வது மற்றும் காஸாவுக்கான புனரமைப்பு உள்ளிட்ட அம்சங்களை இந்த தீர்மானம் முன்வைத்துள்ளது.

இந்த மோதலுக்கான  முக்கிய காரணங்களான சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேலிய கொடுங்கோன்மைக்கு முற்றுப் புள்ளி  வைப்பதன் மூலம் அமைதியான தீர்வை அடைவதற்கான முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :