NATIONAL

மகனின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக ஜெய்ன் பெற்றோர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13- தங்கள் மகன் ஜெய்ன் ரய்யான் அப்துல்
மாலிமிற்கு உடல் ரீதியாக காயம் ஏற்படும் அளவுக்கு அச்சிறுவனின்
பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக அவனது பெற்றோருக்கு எதிராக
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி டாக்டர் ஷாஹ்லிசா வார்னோ முன்னிலையில் தங்களுக்கு எதிராக
கொண்டு வரப்ட்டக் குற்றச்சாட்டை 29 வயதுடைய ஜாய்ம் இக்வான்
ஜஹாரி மற்றும் இஸ்மானியா அப்துல் மானாப் ஆகிய இருவரும் மறுத்து
விசாரணை கோரினர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கும் டிசம்பர்
6ஆம் தேதி இரவு 9.55 மணிக்கும் இடையே ஜாலான் பிஜேயு டாமன்சாரா
டாமாய் பகுதியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் கூ ஹயாத்தி கூ ஹருண்
வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில்
வழக்கறிஞர் ஃபாஹ்மி அப்துல் மோய்ன் ஆஜராகிறார்.

கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி டாமன்சாரா டாமாய், இடமான்
அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலுள்ள நீரோடை ஓரம் ஜெய்ன் ராய்யான்
உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த ஆறு வயதுச் சிறுவன் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட
ஒரு தினத்திற்குப் பிறகு அவனது உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
அச்சிறுவன் படுகொலை செய்யப்பட்டது சவப்பரிசோதனையில் தெரிய
வந்ததோடு தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான
அறிகுறியாக அவனது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டன.


Pengarang :