NATIONAL

ஜெய்ன் ரய்யான் தாத்தா, பாட்டி இன்று மாலை விடுவிக்கப்படுவர்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13- படுகொலை செய்யப்பட்ட ஆட்டிஸம்
குறைபாடு உள்ள சிறுவனான ஜெய்ன் ரய்யான் அப்துல் மத்தினின் தாத்தா
பாட்டி இருவரும் இன்று மாலை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவர்.

அவ்விருவரும் விடுவிக்கப்படவுள்ளதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருள்நிஸாம் ஜாபர் இன்று உறுதிப்படுத்தினார்.

அவர்கள் இருவரும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக 24 மணி
நேரம் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறிய அவர், இன்று மாலை
அவர்கள் விடுவிக்கப்படுவர் என்றார்.

அவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திலேயே
விடுவிக்கப்படுவர் என்றும் தடுப்புக் காவல் நடைமுறைகளுக்காக அவர்கள்
நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அத்தம்பதியர்
இன்னும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
உள்ளதாக அவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஃபாஹ்மி மொய்ன்
தெரிவித்தார்.

அத்தம்பதியரிடம் நேற்று நள்ளிரவிலும் இன்று காலையிலும் வாக்குமூலம்
பதிவு செய்யப்பட்டது. இன்றும் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்
பணி மேற்கொள்ளப்படுகிறது என்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்ற
வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐம்பத்தாறு வயதுடைய அவ்விருவரையும் சிலாங்கூர் மாநிலப் போலீஸ்
தலைமையகத்தின் டி9 பிரிவினர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்
கைது செய்தனர்.


Pengarang :