NATIONAL

மாவ்கோம்-சி.ஏ.ஏ.எம். இணைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, ஜூன் 13 – மலேசிய வான் போக்குவரத்து ஆணையத்தை
(மாவ்கோம்) கலைப்பது தொடர்பில் இரு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில்
இம்மாதம் தாக்கல் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.

மலேசிய வான் போக்குவரத்து ஆணைய (கலைப்பு) மசோதா 2024 மற்றும்
மலேசிய சிவில் வான் போக்குவரத்து நிறுவன (திருத்த) மசோதா ஆகிய
இரு மசோதாக்களை தாக்கல் செய்ய அமைச்சரவை கடந்த ஜூன் 5ஆம்
தேதி ஒப்புதல் அளித்ததாக அவர் சொன்னார்.

மாவ்கோம் அமைப்பைக் கலைத்து அதன் பணிகள் அனைத்தையும்
சி.ஏ.ஏ.எம். வசம் ஒப்படைப்பதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம்
தேதி அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புக் கொண்டதன்
அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர்
தெளிவுபடுத்தினார்.

உலகலாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின்
வியூக நடவடிக்கைக்கு ஏற்ப வான் போக்குவரத்துத் துறையை ஒரே
அமைப்பாக ஒருங்கிணைக்கும் வகையில் மலேசிய வான் போக்குவரத்துத்
துறைக்கான ஒழுங்கு முறை கட்டமைக்கப்படும் என்று அவர்
தெரிவித்தார்.

இந்த சீர்திருத்த நடவடிக்கை, நிர்வாக நடைமுறைகளால் ஏற்படக்கூடிய
இடையூறுகளை குறைக்கும் என்பதோடு சிவில் வான் போக்குவரத்து
துறையில் குறிப்பாக லைசென்ஸ் வழங்குவதில் சேவை முறையை
மேலும் மேம்படுத்தும் என்று அவர் சொன்னார்.

மாவ்கோம் மற்றும் சி.ஏ.ஏ.எம். ஆகிய இரு அமைப்புகளை இணைப்பதன்
மூலம் அவ்விரு அமைப்புகளிடமிருந்து தனித் தனியாக ஒப்புதலைப் பெற
வேண்டிய அவசியம் இனி இராது என்றார் அவர்.

அதற்கு பதிலாக அரசாங்கத்தின் ஒரே அமைப்பு நுட்ப விண்ணப்பங்களைப்
பரிசீலித்து அங்கீகாரமும் லைசென்சும் வழங்கும் என்றார் அவர்.


Pengarang :