ANTARABANGSA

போர் நெருக்கடி காரணமாக உலகில் 12 கோடி பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர்

ஜெனிவா, ஜூன் 13- உலகில் வலுக்கட்டாயமாகக் குடியிருப்புகளை
இழந்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 12 கோடி பேரை எட்டியது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை அபரிமிதமாக உயர்வு கண்டு
வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் கூறியது.

இது வரலாற்றுப்பூர்வ புதிய அளவீடாக விளங்குகிறது என்று அந்த
நிறுவனம் அறிக்கை ஒன்றில் வர்ணித்துள்ளதாக அனாடோலு செய்தி
நிறுவனம் தெரிவித்தது.

இது தீர்வை காணமுடியாத தொடரும் நெருக்கடியாகவும் தொடர்ந்து
மாற்றம் கண்டு வரும் மோதலாகவும் இது விளங்குகிறது என அது
குறிப்பிட்டது.

குடியிருப்புகளை இழந்த மக்களின் எண்ணிக்கை உலகின் 12வது பெரிய
நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு அதாவது, ஜப்பான் தேசத்தின் மக்கள்
தொகை அளவுக்கு உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்தது.

எண்ணிக்கை உயர்வு கண்டதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
முதல் சூடானில் நிகழ்ந்து வரும் நெருக்கடியே காரணம் விளங்குகிறது.
அந்நாட்டில் 71 லட்சம் பேர் உள்நாட்டிலும் மேலும் 19 லட்சம் பேர்
வெளிநாடுகளுக்கும் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு இறுதிவரை 1 கோடியே 80 லட்சம் சூடான் மக்கள்
தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியதாக ஐ.நா.வின்
அதிகளுக்கான அமைப்பு மேலும் கூறியது.

சூடான் தவிர, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மியன்மாரில்
நிகழ்ந்து வரும் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் இடப் பெயர்வுக்கு
ஆளாக நேர்ந்தது.

பாலஸ்தீனத்தில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக சுமார் 17 லட்சம்
பேர் அல்லது அந்நாட்டின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் இடம்
பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Pengarang :