NATIONAL

குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் சுதந்திரமாக உலவினால் நாடு பாதுகாப்பற்றாகி விடும்- பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 14- தவறான நடத்தை மற்றும் ஊழலுக்கு எதிராக
தொழில் நிபுணத்துவத்துடனும் உறுதியாகவும் நடவடிக்கை
எடுக்காவிட்டால் நாடு பாதுகாப்பானதாக இருக்காது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் நலனுக்காக அந்தஸ்து பாராமல் குற்றவாளிகள் மற்றும்
ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியான
நடவடிக்கையை எடுக்கும்படி அரச மலேசிய போலீஸ் படையை அவர்
கேட்டுக் கொண்டார்.

குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை அதிக கால
அவகாசத்தை எடுத்துக் கொள்ளும் போது மக்கள் அசௌகரியத்தை
உணர்வதோடு அது குறித்து புகாரும் செய்வதாக அவர் தெரிவித்தார்.

எனினும், எந்த தரப்பினரையும் பாதுகாக்காமல் நியாயமாக விசாரணை
நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்பதை அவர்கள் உணர
வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் பாதுகாப்பதாக இருந்தால்
எனக்கு பிரதமர் பதவி தேவையில்லை. அவர்களுக்கு எதிரான
நடவடிக்கை தொழில் நிபுணத்துவ ரீதியில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ஆதாரங்கள் மற்றும் சட்ட அடிப்படையின்றி யாரையும் தண்டிக்க
வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்றிரவு இங்குள்ள புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நடைபெற்ற
2023 தேசிய விளையாட்டு விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது
அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை தாம் இந்த மேடையில் குறிப்பிட்டு பேசுவதற்கு
அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் குற்றச் செயல்களுக்கு பலியாகியுள்ளதே காரணம் என்றும் அவர் சொன்னர்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை
விளையாட்டு வீரர்கள், அரசாங்க ஊழியர்கள் உள்பட அனைத்துப்
பிரஜைகளுக்கும் வழங்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.


Pengarang :