NATIONAL

எரிதிராவக தாக்குதல்- விசாரணை குறித்த விபரங்களைக் கோருகிறார் ஃபைசால் வழக்கறிஞர்

ஷா ஆலம், ஜூன் 14 – கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் ஹலிம்
மீதான எரிதிராவக தாக்குதல் தொடர்பான காவல் துறையின்
விசாரணையின் ஆகக்கடைசி மேம்பாடுகள் குறித்த விபரங்களைக் கோரி
அவரின் வழக்கறிஞர் முகமது ஹய்ஜான் ஓமார் காவல் துறைக்குக் கடிதம்
அனுப்பவுள்ளார்.

இத்தாக்குதல் நடந்து ஒரு மாதக் காலம் ஆன போதிலும் பாதிக்கப்பட்ட
அந்த விளையாட்டாளருக்கு எந்த விபரமும் தெரியாத நிலையில்
அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் சமீபத்திய நிலவரங்களை இரு
வாரத்தில் வழங்கக் கோரி போலீசாருக்குக் கடிதம் அனுப்பப்படும் என்று
சிலாங்கூர் எஃப்.சி. குழுவை பிரதிநிதிக்கும் அந்த வழக்கறிஞர்
தெரிவித்தார்.

இருப்பினும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்குரிய
நம்பத்தன்மையும் தொழில் நிபுணத்துவமும் காவல்துறைக்கு உள்ளது
எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.பி.சி) 107ஏ பிரிவின் படி
விசாரணையின் மேம்பாடு குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்கப்பட
வேண்டும். நாம் அனைவரும் அறிந்தபடி இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு
மாதம் ஆகி விட்டதால் விசாரணையின் சமீபத்திய நிலவரங்களை நாங்கள்
அறிய விரும்புகிறோம் என்றார் அவர்.

இந்த விசாரணை தொடர்பான நிலவரங்களை இரு வாரங்களில்
தெரிவிக்கும்படி கோரி காவல் துறைக்கு நாங்கள் கடிதம்
அனுப்பவுள்ளோம். விசாரணையின் முடிவுகள் பொதுமக்களுக்கு
தெரிவிக்கப்படுமா என்று தெரியவில்லை. இருப்பினும், நாங்கள்
தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என அவர்
குறிப்பிட்டார்.

எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளான ஃபைசால் ஹலிம் நேற்று முதன்
முறையாகப் பத்திரிகையாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது முகமது
ஹய்ஜான் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :