NATIONAL

காப்புறுதி பாலிஸியை ரத்து செய்ய விரும்பிய ஆடவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த காப்புறுதி முகவர் கைது

பாலிக் பூலாவ், ஜூன் 14- தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொலை
மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் காப்புறுதி முகவர்
ஒருவரை போலீசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

இங்குள்ள பாயான் லெப்பாசில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த
இச்சம்பவம் தொடர்பில் உணவு விநியோகிப்பாளரான பாதிக்கப்பட்ட
ஆடவர் செய்த புகாரின் பேரில் 30 வயதுடைய அந்த காப்புறுதி முகவர்
கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டதாகப் பாராட் டாயா மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் கூறினார்.

இருபத்தெட்டு வயதுடைய அந்த உணவு விநியோகிப்பாளர் சம்பந்தப்பட்ட
காப்புறுதி முகவரைத் தொடர்பு கொண்டு காப்புறுதி பாலிஸி கட்டணத்தை
செலுத்துவதற்கு போதுமான பணம் இல்லாததோடு அந்த பாலிஸியை
தொடர்வதற்கும் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

காப்புறுதி பாலிஸியை ரத்து செய்தால் கொலை செய்து விடுவேன் என்று
அந்த ஆடவரை மிரட்டிய காப்புறுதி முகவர், அந்த பாலிஸியின் ஓராண்டு
கால தவணை முழுமையடைவதற்கு ஏதுவாக மூன்று மாதக் காலப் பாலிஸி
கட்டணத்தை தாமே செலுத்துவதாகவும் கூறியுள்ளார் என கமாருள்
சொன்னார்.

காப்புறுதி பாலிஸியை ரத்து செய்வதற்காகக் காப்புறுதி அலுவலகம்
வரக்கூடாது என்றும் அந்த முகவர் மிரட்டியுள்ளார் என அவர்
குறிப்பிட்டார்.

இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 507வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்வதற்காக அந்த முகவர் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :