SELANGOR

பள்ளி, மண்டம், மசூதிகளைத் தரம் உயர்த்த ஸ்ரீ செர்டாங் தொகுதி வெ.200,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 16- பல்வேறு பொது வளாகங்களில் அடிப்படை
வசதிகளைத் தரம் உயர்த்தும் பணிக்காக ஸ்ரீ செர்டாங் தொகுதி 200,000
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பொது மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பள்ளிகள், சமூக
மண்டபங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தரம் உயர்த்தும் பணிக்காக இந்த
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ்
அஸ்மி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் ஸ்ரீ செர்டாங் தேசிய இடைநிலைப்பள்ளி, பூச்சோங்
14வது மைல், ஃபார்டு அய்ன் சமயப் பள்ளி (காஃபா) ஆகியவை தலா 30,000
வெள்ளி மானியத்தைப் பெற்றன என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ செர்டாங் இடைநிலைப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் அடிப்படை
வசதிகளை மேம்படுத்துவது, நடைபாதை கூரைகளை சீரமைப்பது, திடலில்
நீரோட்ட வசதியை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிதி
பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பூச்சோங் 14வது மைல் காஃபா பள்ளியில் சபைகூடல்
மையத்தை சீரமைப்பது மற்றும் கூரையை விரிவுபடுத்துவது ஆகிய
பணிகள் இந்த நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

பொது மக்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு
தொகுதி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் என்றும் அவர்
தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு எங்கள் தொகுதி
அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். அந்த திட்டத்தின் அவசியம்
மற்றும் இதர நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :