SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் தூய்மை, பசுமை இயக்கம்

கிள்ளான், ஜூன் 16- சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சமூகத்தினரிடையே  விழிப்புணர்வை வளர்ப்பதற்காக செந்தோசா மாநில  உறுப்பினர் தூய்மை மற்றும் பசுமை பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் அதை வாழ்க்கையின்  அன்றாட வழக்கமாக மாற்றவும் சமூகத்திற்கு  போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது என்று டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

வெள்ளம், வடிகால்  போன்ற சில பிரச்சனைகள் குத்தகையாளர்கள் செய்ய வேண்டிய பணி என்று  பொதுமக்கள் அடிக்கடி கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது  அனைவரும் பகிர்ந்து செய்ய
வேண்டிய பொறுப்பாகும் என அவர் சொன்னார்.

எனவே, வீடுகள் எப்போதும் சுத்தமாகவும்  குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் இருக்கவும், சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதற்கான   விழிப்புணர்வை சமூகத்திற்கு  ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்  அவர் கூறினார்.

சிறார்கள் மத்தியில்  தூய்மை தொடர்பான  விழிப்புணர்வை வளர்ப்பதற்காக தனது தரப்பு பள்ளி அளவில் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குணராஜ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இரண்டு பள்ளிகளில் இத்தகைய  விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் பள்ளி அளவிலும் இந்தப் பிரச்சாரத்தை செயல்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மீண்டும் பசுமையாக்கும் முயற்சியாக மறுசுழற்சி திட்டத்தை செயல்படுத்தி மரங்களை நடுவோம் என்றார் அவர்.

இதற்கிடையில்,  இத்தகைய  பிரச்சாரங்களை மற்ற மக்கள்  பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று  கிள்ளான் துணை டத்தோ பண்டார்  முகமது ஜாரி அஃபெண்டி முகமட் ஆரிப் கேட்டுக் கொண்டார்.

இந்த அணுகுமுறை அனைத்து தரப்பினராலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்றார் அவர்.


Pengarang :