NATIONAL

சீனப் பிரதமர் லீ கியாங்  நேற்றிரவு மலேசியா வந்தடைந்தார்

சிப்பாங், ஜூன் 19- சீனப் பிரதமர் லீ கியாங்  மலேசியாவிற்கான  மூன்று நாள் பணி நிமித்தப் பயணத்தை நேற்று தொடங்கினார். கடந்தாண்டு மார்ச் மாதம் பிரதமராகப்  பதவியேற்ற பிறகு நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும்  முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

லீ மற்றும் அவரது தூதுக்குழுவை ஏற்றிய ஏர் சீனா விமானம் இரவு 8.44 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா முனையம் வந்தடைந்தது.

மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயாங் யுஜிங், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முஹமது  ஆகியோர் சீனப் பிரதமரை வரவேற்றனர்.

கேப்டன் நூர் அகமது ஜைம் ஜஹாரி தலைமையிலான அரச  ரேஞ்சர் ரெஜிமென்ட்டின் (சம்பிரதாயம்) முதலாவது பட்டாளத்தின்  28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் நடத்திய  மரியாதை அணிவகுப்பை லிம் பார்வையிட்டார்.

கடந்த 1974ஆம் ஆண்டு  மே 31ஆம் தேதி   இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசேன் மற்றும் அப்போதைய சீனப் பிரதமர் சோ என்லாய் ஆகியோர்  கூட்டறிக்கையில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மலேசியா மற்றும் சீனா இடையே தொடங்கிய அரச தந்திர உறவுகளின்  50 வது ஆண்டு நிறைவையொட்டி சீனப் பிரதமரின்  வருகை அமைந்துள்ளது.

இந்தப்  பயணத்தின் போது லீ​​, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு விஷயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளதோடு பரஸ்பரம் தொடர்புள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.

இலக்கவியல்  பொருளாதாரம், பசுமை மேம்பாடு, சுற்றுலா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சீனாவுக்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள்.

சீனா-மலேசியா அரசதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்  வகையில் நடத்தப்படும் இரவு விருந்திலும் அவர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த பயணத்தின் போது  பிரதமர் லீ பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் சந்திப்பை நடத்தவிருக்கிறார்.

கோம்பாக்கில் நடைபெறும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும், இரு நாட்டு  வர்த்தகர்கள் கலந்து கொள்ளும்  மதிய விருந்திலும் சீனப் பிரதமர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Pengarang :