NATIONAL

காஜாங் நகைக்கடையில் கொள்ளை: 32 லட்சம் வெள்ளி இழப்பு- காவல் துறை தகவல்

கோலாலம்பூர், ஜூன் 19- காஜாங் நகரில் பேரங்காடி ஒன்றில் உள்ள
நகைக்கடையில் நேற்று நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் ஏற்பட்டு இழப்பு
சுமார் 32 லட்சம் வெள்ளி என்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக
அந்த நகைக்கடையின் ஊழியர்கள் உள்பட எழுவரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகக் காஜாங் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது நாசீர் ட்ராமான் கூறினார்.

இதன் தொடர்பில் மேலும் சில சாட்சிகளை விரைவில்
அழைக்கவுள்ளோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.

பாதுகாவலர் சீருடையுடன் முகமூடி மற்றும் கையுறை அணிந்த நான்கு
கொள்ளையர்கள் நேற்று முன்தினம் மாலை 3.17 மணியளவில் அந்த
பேரங்காடியின் முதல் மாடியிலுள்ள நகைக் கடையில் நுழைந்தனர்.

இரு கைத் துப்பாக்கிகள் மற்றும் ஒரு சூழல் துப்பாக்கியை
வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் அக்கொள்ளையர்கள் கண்ணாடிப்
பேழையை சுத்தியலால் உடைத்து அதிலிருந்த நகைகளைக்
கொள்ளையிட்டுத் தப்பினர்.

இக்கொள்ளையின் போது கடையின் கூரையை நோக்கில் துப்பாக்கி
வேட்டு கிளப்பிய அக்கொள்ளையர்கள் அந்த கட்டிடத்தின்
கீழ்த்தளத்திலுள்ள கார் நிறுத்துமிடம் வழியாகத் தப்பிச் சென்றனர்.


Pengarang :