NATIONAL

ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபரீதம்- கட்டுப்பாட்டை இழந்த கார் இடுகாட்டுச் சுவரை மோதியது

கப்பளா பாத்தாஸ், ஜூன் 19- கார் ஓட்டுநர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து இடுகாட்டின் சுவரை மோதியது.

இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் கெடாவில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்ததாகச் செபராங் பிறை உத்தாரா மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி சுலைமான் கூறினார்.

இந்த விபத்தில் 37 வயதான அந்த கார் ஓட்டுநருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் விலா பக்கத்தில் லோசான வலி மட்டுமே உண்டானதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறுவனம் ஒன்றில் பொது உதவியாளராகப் பணி புரியும் அந்த ஆடவர் பெர்மாத்தாங் ஹாஜி ஹசானில் ஹஜ்ஜூப் பெருநாளை முடித்துக் கொண்டு பெர்மாத்தாங் திங்கியிலுள்ள வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாடவர் ஜாலான் கெடா சாலை சமிக்ஞை விளக்கு பகுதியை அடைந்த போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரை மோதி இடுகாட்டிற்குள் நுழைந்தது என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட காரோட்டி சிகிச்சைக்காகக் கப்பளா பாத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார். இந்த விபத்தை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


Pengarang :