NATIONAL

சீனப் பிரதமருக்குப் பெர்டானா சதுக்கத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது

புத்ராஜெயா, ஜூன் 19- மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங்கிற்கு இன்று காலை பெர்டானா சதுக்கத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

கடந்தாண்டு மார்ச் மாதம் சீனாவின் பிரதமராக லீ பதவியேற்றப் பிறகு மலேசியாவுக்கு அவர் புரியும் முதலாவது வருகையாக இது அமைகிறது.

இன்று காலை 9.30 மணியளவில் பெர்டானா சதுக்கம் வந்தடைந்த  லீயை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அரச மலாய் இராணுவத்தின் முதலாவது பட்டாளத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்கள் நடத்திய மரியாதை அணிவகுப்பை லீ பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் நாட்டின் துணைப் பிரதமர்களாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அரசந்திரிகளும் கலந்து கொண்டனர்.

சீனா மற்றும் மலேசியா இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் இரு தரப்பு நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பிரதமர் லீயும் அன்வாரும் பேச்சு நடத்தினர்.

இலக்கவியல் பொருளாதாரம், பசுமை மேம்பாடு, சுற்றுலா, வீடமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சீனாவுக்கு வேளாண் மூலப்பொருள் ஏற்றுமதி தொடர்பில் ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடும் சடங்கை இரு தலைவர்களும் பார்வையிடுவர்.

சீனா, கடந்த 15 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. அந்நாட்டுடனான மலேசியாவின் வர்த்தக மதிப்பு 45,084 கோடி வெள்ளியாகும்.


Pengarang :