NATIONAL

ஹஜ்ஜூப் பெருநாளின் மூன்றாம் தினத்தில் காஸா மீது இஸ்ரேல் மாபெரும் தாக்குதல்

காஸா (பாலஸ்தீனம்), ஜூன் 19-  ஹஜ்ஜூப் பெருநாளின் மூன்றாவது தினத்தில்  காஸாவின் பல இடங்களில் இஸ்ரேல் மாபெரும் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு  மேலும் பலர் காயமுற்றனர்  என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஃபாவில் நிகழ்ந்த வெடி குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அனடோலு ஏஜென்சி கூறியது.

இஸ்ரேலிய படைகள் டஜன் கணக்கான வீடுகள் மீது  குண்டுகளை வீசின. அதே நேரத்தில் பீரங்கி பிரிவுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில்லிருந்து எறிபடைத் தாக்குதல்களை தொடர்ந்தன.

இதற்கிடையில், டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் 13 பேர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

காஸாவில் ஜலான் சஹாபா மீது இஸ்ரேல் நடத்திய  ட்ரோன் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மற்றொருவர் காயமடைந்தார் என அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை குறிப்பிட்டது.

கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள குசா நகரில் நடந்த குண்டுவெடிப்பின் விளைவாக இரண்டு பாலஸ்தீனர்கள் இறந்ததாகவும் காஸா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய  படைகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள டெல் அல்-சுல்தான் சுற்றுப்புறத்தில் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் காஸா மீது இஸ்ரேலிய  படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை  37,372 பேர் கொல்லப்பட்டதோடு மேலும்  85,452 பேர் காயமடைந்தனர்.


Pengarang :