NATIONAL

நெங்கிரி இடைத் தேர்தல்- தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி நடைபெறும்

புத்ராஜெயா, ஜூன் 20 – கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி இடைத் தேர்தல்
தொடர்பில் விவாதிப்பதற்காக தேர்தல் ஆணையம் எதிர்வரும் ஜூன் 28ஆம்
தேதி வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

கிளந்தான் மாநிலத்தின் என்43. நெங்கிரி சட்டமன்றத் தொகுதி எதிர்பாராத
வகையில் காலியானது தொடர்பில் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ
முகமது அமார் நிக் அப்துல்லாவிடமிருந்து தாங்கள் அதிகாரப்பூர்வ
அறிக்கையைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர்
டத்தோ இக்மாருள்டின் இஷாக் கூறினார்.

சபாநாயகரிடமிருந்து அறிக்கை பெற்ற 60 நாட்களுக்குள் இடைத் தேர்தல்
நடத்தப்பட வேண்டும் என்று கிளந்தான் மாநில அமைப்புச் சட்டத்தின்
ஷரத்து (3) அதிகாரம் 31ஏ கூறுகிறது என்று அவர் நேற்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் மனு, வேட்பு
மனுத்தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதி ஆகியவற்றோடு இத்தேர்தலில்
பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்படும்
என்று அவர் சொன்னார்

நெங்கிரி தொகுதி காலியானது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர்
நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

பெர்சத்து கட்சியின் 10.4வது அமைப்பு விதிக்கு முரணாகச்
செயல்பட்டதற்காக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசி அபு
நாயிமை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவது தொடர்பான அறிக்கையை
பெர்சத்து கட்சி சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :