SELANGOR

சைக்கிளோட்டப் போட்டியை முன்னிட்டு பல சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும்

ஷா ஆலம்,  ஜூன் 20 – சிலாங்கூர் மாநில  மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.எ.என்.எஸ்.) ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  2024 சிலாங்கூர் அனைத்துலக  (எஸ்ஐஆர்) சாம்பியன்ஷிப்  பந்தயத்தை முன்னிட்டு  பல சாலைகள் கட்டமாக போக்குவரத்துக்கு  மூடப்படவுள்ளன.

இந்த பந்தயம் பி.கே. என்.எஸ். தலைமையகத்தில்  தொடங்கி நெடுஞ்சாலைகள், மலைப்பாங்கான சாலைகள், பி.கே.என்.எஸ். மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளான கோத்தா புத்ரி, பெக்கான் ஈஜோக் மற்றும் ஷா ஆலம் வரையிலான 145 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியுள்ளது.

இந்த எஸ்.ஐ.ஆர். 2024 போட்டியில் மலேசியாவைத் தவிர பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர், புருணை, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தொழில்முறை மற்றும் அமெச்சூர் ஆகிய இரண்டு பந்தயப் பிரிவுகளைக் கொண்ட இப்போட்டியில்  வெற்றியாளர்களுக்கு 100,000  வெள்ளி வரையிலான மொத்தப் பரிசுகள் காத்திருக்கின்றன.

சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பு (சேய்),  சிலாங்கூர் சைக்கிளோட்டச் சங்கம்,  ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் அரேனா ஆசியா மலேசியா ஆதரவில் இப்போட்டி நடைபெறுகிறது.


Pengarang :