NATIONAL

செலாட் கிள்ளான் உறுப்பினரின் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை- சபாநாயகர் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூன் 20 – செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஸாரியின் உறுப்பினர் அந்தஸ்தை  பெர்சத்து ரத்து செய்தது தொடர்பில் சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்திற்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.

அப்துல் ரஷிட்டின் நிலை குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு அந்த  எதிர்க்கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தாம்  காத்திருப்பதாக சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.

இதுவரை எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் சிலாங்கூர் அரசியலமைப்பு மற்றும் அதன்  தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் இருக்கும்  என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

கட்சிக்கான விசுவாச வாக்குறுதி தொடர்பில் தலைமைத்துவ மன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக ரஷிட்டின் உறுப்பினர் பதவியை பெர்சத்து  கட்சி ரத்து செய்ததைத் தொடர்ந்து செலாட் கிள்ளான் தொகுதி காலியானதாக அறிவிக்குமாறு லாவ் வெங் சானை பெர்சத்து அர்மடா தலைவர் வான் அகமட் ஃபைசால் வான் அகமது கமால்   வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் தலைமைத்துவத்திற்கு  அப்துல் ரஷிட்  தனது ஆதரவை முன்னதாக அறிவித்திருந்தார்.


Pengarang :