NATIONAL

பாலர் பள்ளி மாணவியை மோதிய பள்ளி வேன் ஓட்டுநர் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

ஜோகூர் பாரு, ஜூன் 21- பண்டார் ஸ்ரீ ஆலம், ஜாலான் சூரியாவில் பாலர்
பள்ளி மாணவியை மோதி அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்தாக
சந்தேகிக்கப்படும் பள்ளி வேன் ஓட்டுநர் நேற்று போலீஸ் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார்.

நேற்று கைது செய்யப்பட்ட அந்த ஐம்பது வயது பெண், வாக்குமூலம்
பதிவு செய்யப்பட்டப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சோஹாய்மி இஷாக் கூறினார்.

அந்த மாணவி வேனின் முன்புறம் இருந்ததை தாம் கவனிக்கவில்லை
என்று அந்த வேன் ஓட்டுநர் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

அவரின் அண்ணன் வேனின் பின்புறமாக வெளியேறி வீட்டின் வேலி
அருகே சென்ற போது அச்சிறுமியும் அவரைப் பின்பற்றிச் சென்றிருப்பார் என்று
அவர் நினைத்துள்ளார்.

எனினும், அம்மாணவி வேனின் முன்புறம் இருந்ததை உணராத
நிலையில் ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். ஏதோ இடிபடுவதை
உணர்ந்த அவர் உடனே வேனை நிறுத்தியுள்ளார் என மாவட்ட காவல்
நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.

அந்த வேன் ஓட்டுநருக்கு முந்தைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை
என்பதும் அவர் பள்ளி வேனை ஓட்டும் பணியை முறையான
அனுமதியுடன் மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பில் 39 வயதான அந்த மாணவியின் தாயாரிடமும்
போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று அவர் மேலும்
சொன்னார்.

நேற்று காலை 11.35 மணியளவில் தங்கள் வீட்டின் எதிரே நிகழ்ந்த
அச்சம்பவத்தில் ஐந்து வயதான அந்த பள்ளி மாணவி தாம் பயணித்த
வேனில் மோதுண்டு உயிரிழந்தார்.


Pengarang :