NATIONAL

மனைவியைக் கொன்ற கணவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்

ஈப்போ, ஜூன் 21- மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவர்
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து சரணடைந்தார்.
இச்சம்பவம் பத்து காஜா, பெஜாபாட் போஸ் சாலையில் உள்ள ஹோட்டல்
ஒன்றில் நேற்று நிகழ்ந்தது.

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் பத்து காஜா போலீஸ் நிலையத்தில்
சரணடைந்த அந்த 36 வயது ஆடவர் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டதாகப் பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் முகமது நோர்
அஹேவான் முகமது கூறினார்.

தனது 32 வயது மனைவியை ஹோட்டல் அறை ஒன்றில் படுகொலை
செய்தப் பின்னர் 32 வயதுடைய அந்த ஆடவர் காவல் நிலையத்தின் புகார்
முகப்பிடத்தில் இருந்து போலீஸ்கார ர்களிடம் சரணடைந்தார் என அவர்
தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக் குத்து
காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும் அவரின் அருகில்
கத்தி ஒன்றையும் கண்டனர் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.

பல முறை வேண்டியும் மணமுறிவு நடவடிக்கையைத் தொடர மனைவி
முடிவெடுத்த காரணத்தால் ஆத்திரமடைந்த அவ்வாடவர் இந்த கொடூரச்
செயலைப் புரிந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
என்று அவர் கூறினார்.

கணவன், மனைவி இருவரும் தனித் தனியாக ஹோட்டலுக்கு வந்து ஒரே
அறையில் இரவைக் கழித்துள்ளனர் எனக் கூறிய அவர், இந்த கொலைச்
சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விசாரணை
அதிகாரி வி.கே. குணசீலனை 012-3634341 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :